9/22/2010 3:03:19 PM
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் துவங்கியது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘எந்திரன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் மிகப் பிரமாண்டமாக இயக்கியுள்ளார்.
திரையுலகமே எதிர்பார்த்திருக்கும் அக்டோபர் 1ந் தேதி ரிலீசாகிறது. இதற்காக, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ‘எந்திரன்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் எந்திரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2250 பிரிண்டுகளுடன் 3000 அரங்குகளில் திரை விருந்து படைக்கவிருக்கிறது எந்திரன்.
இந்த நிலையில் எந்திரனுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் முன்பதிவு இப்போதே ஆரம்பித்துவிட்டது. பொதுவாக ரிலீஸுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் முன்பதிவு துவங்கும்.
ஆனால் எந்திரன் வெளியாக 10 நாள் இருக்கும்போதே, சென்னையில் அபிராமி 7 நட்சத்திர தியேட்டரில் திங்கள்கிழமை மாலை துவங்கியது. முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. டிக்கெட் விலை ரூ 120 மற்றும் 100 மட்டுமே.
புதன்கிழமை காலை நிலவரப்படி, முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு சில மட்டுமே இன்னும் உள்ளன. அபிராமி மெகா மாலில் உள்ள மற்ற மூன்று திரையரங்குகளிலும் கூட எந்திரனே திரையிடப்பட உள்ளது. இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சத்யம் போன்ற மல்டிபிளக்ஸ்களில் இன்னும் ஓரிரு நாள்களில் எந்திரனுக்கான முன்பதிவு துவங்கவிருக்கிறது.
http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=3304&id1=३
[END]